×

வேலூர் அலமேலுமங்காபுரம் பள்ளி அருகே சாலையோரத்தில் வீசப்பட்ட மாத்திரைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்:வேலூர் அலமேலுமங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் காலாவதியான மாத்திரைகள் வீசப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி முழுவதும் தினசரி 200 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து பெறப்படுகிறது. இதனை மாநகராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையங்களுக்கு கொண்டு சென்று தரம் பிரித்து உரமாக மாற்றப்படுகிறது. மேலும் காய்கறி கழிவுகள், இலைகள், உணவுக்கழிவுகளை வீடுகளிலேயே உரமாக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், அலமேலுமங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சர்வீஸ் சாலையோரம் மற்றும் அங்குள்ள கால்வாயில் காலாவதியான மாத்திரைகள் அதிகளவு வீசப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சர்வீஸ் சாலையோரங்களில் இறைச்சி கழிவுகள் மூட்டைகளில் கட்டி வீசி விடுகின்றனர். இதனால் சர்வீஸ் சாலை முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இது ஒருபுறம் என்றால் தற்போது மாநகர பகுதியில் இயங்கி வரும் சில தனியார் மருத்துவமனை மற்றும் ரத்த பரிசோதனை நிலையங்களில் உபயோகப்படுத்தப்பட்ட பஞ்சுகள், ஊசிகள், சிரஞ்சுகள், மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தும் நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர்.

தங்கள் சுய நலத்திற்காக பொது இடங்களில் செல்லக்கூடிய சாலை ஓரத்தில் வீசி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சுற்றுசூழல் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் கிளினிக் நடத்துபவர்களும் மருத்துவ கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் மூட்டைகளாக கட்டி வாகனங்களில் கொண்டு வந்து தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் மருத்துவ கழிவுகளிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் ஏற்பட்டு அந்த சாலை வழியாக வாகனங்களில் செல்லும்போது மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வேலூர் அலமேலுமங்காபுரம் பள்ளி அருகே சாலையோரத்தில் வீசப்பட்ட மாத்திரைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Alamelumangapuram school ,Vellore ,Alamelumangapuram Government High School ,Vellore Corporation ,Alamelumangapuram ,school ,Dinakaran ,
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!